கானாவை வீழ்த்திய போர்த்துகல் , ரொனால்டோவின் புதிய சாதனை!

கட்டார் நாட்டில் மிகச் சிறப்பாக, வெகு விமர்சையாக உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போர்த்துகல் அணி நேற்று தனது முதல் போட்டியில் விளையாடியது.

உலகின் அதிக ரசிகர்களைக் கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது இறுதி உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடரை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து நேற்றைய போட்டியானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற போட்டியாக நடத்தப்பட்டது.

இந்த 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற 3 ஆவது ஆட்டத்தில் கானாவை – போர்த்துகல் அணி 3:2 என்ற கோல்கள் விகிதத்தில் வென்றது. குழு எச் இலுள்ள இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி  கட்டார்  தலைநகர் தோஹாவிலுள்ள 974 அரங்கில் நடைபெற்றது.

இடைவேளை வரை இரண்டு அணிகளும் எவ்வித கோள்களையும் பெறவில்லை. 65 ஆவது நிமிடத்தில் போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் ஒன்றைப் போர்த்துகள் அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.  இதன் மூலம் 5 உலகக் கிண்ண சுற்றுப்போட்டிகளில் கோல் புகுத்திய உலகின் முதல் வீரர் எனும் சாதனைக்குரியவாராக ரொனால்டோ ஒரு புதிய சாதனையை படைத்தார்.

ஆனால், 73 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் பின்வரிசையில் ஏற்பட்ட தடுமாற்றங்களுக்கு மத்தியில் கானா வீரர் அண்ட்றே அயேவ் கோல் புகுத்தினார். இதனால் கோல் எண்ணிக்கை சமநிலையை அடைந்தது 73 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் ஃபீலிக்ஸ் செகுய்ரா, கோல் அடித்து போர்த்துகலை மீண்டும் முன்னிலைக்கு கொண்டுவந்தார். 80 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் கொன்சிகாவோ லியோ அவ்வணியின் 3 ஆவது கோலை அடித்தார்.

எனினும்  89 ஆவது நிமிடத்தில் கானா வீரர் புகாரி கானாவின் 2 ஆவது கோலை புகுத்தினார். இருப்பினும் கூட கானா அணியினரால் மூன்றாவது  கோலை புகுத்த முடியாது, 3-2 என்ற வித்தியாசத்தில் போர்த்துகல் அணி நேற்றைய போட்டியை தனதாக்கியது. 

Spread the love