காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ள நிலையில் இப்பேரணி முல்லைத்தீவில் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு ஆதாரவைத்தியசாலை முன்றலில் ஆரம்பமான இந்த  ஆர்ப்பாட்டப் பேரணி புதுக்குடியிருப்பு சந்திவரை சென்றது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டிருந்த வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எம்மிடம் மீள கையளிக்கவேண்டும், கொலைக்குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்பட வேண்டும், சர்வதேசம் தமக்கான தீர்வினைப் பெற்றுத்தர முன்வரவேண்டும், இராணுவம் வெளியேறவேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும் என்பன உள்ளிட்ட கோசங்களை எழுப்பினர்.

பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிவப்பிரகாசம் சிவமோகன், வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசாரவிகரன், கந்தையா சிவநேசன், காணாமல் போனோரைத் தேடி அறியும்குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன், மின்சாரசபைத் தொழிற்சங்கத் தலைவர் பியந்த விக்கிரமசிங்க, நவசமசமாஜக் கட்சியின் அரசியல்குழு உறுப்பினர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் க.விஜிந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள் சமூகசெயற்பாட்டார்கள் எனப் பலரும் இவ்வார்ப்பாட்டத்தில் கந்துகொண்டு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு வலுச்சேர்த்தனர். பேரணியின் நிறைவில் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அவ்வறிக்கை பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவராக வேலன் சுவாமிகளிடம் சர்வதேச சமூகத்திற்கு அனுப்பிவைப்பதற்காக கையளிக்கப்பட்டது. 

 

Spread the love