கத்தார் தோஹாவில் ‘இலங்கையின் சுவை’

கத்தார் நாட்டில் வசிக்கும் கத்தார் நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மத்தியில் நாட்டின் நற்பெயரை அதிகரிக்கும் நோக்கில், தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம், லுலு குழுமத்துடன் இணைந்து, ‘இலங்கையின் சுவை’, ‘இலங்கை கைத்தறி மற்றும் பட்டிக் சேலை விழா’ என்ற தலைப்பில் பன்முக இலங்கை ஊக்குவிப்பு நிகழ்வை ஆரம்பித்தது.

இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஒட்டி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோஹாவில் உள்ள டி-ரிங் ரோட்டில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டில், லுலு குழுமத்தின் பணிப்பாளர் கலாநிதி. மொஹமட் அல்தாஃப் முஸ்லியம் வீட்டில், கத்தார் அரசிற்கான இலங்கைத் தூதுவர் மஃபாஸ் மொஹிதீன் ஆகியோர் இந்த நிகழ்வை 2022 பிப்ரவரி 06ஆந் திகதி தொடங்கிவைத்தனர். பெருநிறுவன தலைவர்கள் மற்றும் வர்த்தகர்கள், இலங்கையிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்பவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பெருமளவிலான அழைப்பாளர்கள் மற்றும் விருந்தினர்கள் விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு கத்தாரில் உள்ள அனைத்து 17 லுலு ஹைப்பர்மார்க்கெட் ஸ்டோர்களிலும் 2022 பிப்ரவரி 12 வரை காட்சிப்படுத்தப்படும். லுலு குரூப் இன்டரநெஷனல் ஆசியாவின் மிகப்பெரிய சில்லறை சங்கிலிகளில் ஒன்றாவதுடன், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மிகப்பெரியதுமாகும்.

இந்த ஒரு வார கால இலங்கை உற்பத்திகள் மற்றும் உணவு சந்தையானது, இலங்கையிலிருந்து பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்பட்ட பலதரப்பட்ட புதிய மரக்கறிகள், பழங்கள், ஊக்குவிப்பு விலையில் வழங்கப்படும் பல்வேறு வகையான புதிய மரக்கறிகள், பழங்கள் ஆகியவற்றுடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றது. இந்த ஆண்டு நிகழ்வில் கறுவாவுடன் கூடிய கித்துல் மா, பாதுகாக்கப்பட்ட உணவுப் பொருட்கள், உண்மையான சுவையூட்டிப் பொருட்கள், பல்வேறு வகையான பிஸ்கட்கள் மற்றும் தின்பண்டங்கள் போன்ற பல புதிய தயாரிப்புக்கள் மற்றும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. தேங்காய் கிரீம், தேங்காய் பால் மற்றும் குளிர்ந்த அழுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான இயற்கை தேங்காய் தயாரிப்புக்களின் பல வகைகள் தள்ளுபடி விலைகளுடன் காட்சிப்படுத்தப்பட்டன. இலங்கையைச் சுற்றியுள்ள தோட்டங்களில் இருந்து மஞ்சள், கெமோமைல் மற்றும் ஏனைய மூலிகைகளுடன் கூடிய பல்வேறு வகையான தேயிலை மற்றும் தேயிலை அடிப்படையிலான மூலிகைத் திரவியங்களும் நிகழ்வில் சந்தைப்படுத்தப்பட்டன.

பிரித்தானிய, டச்சு மற்றும் போர்த்துக்கேய மற்றும் இந்திய (குறிப்பாக தென்னிந்திய) தாக்கங்களுடன் பான்-ஆசியன் போன்ற பல காலனித்துவத் தாக்கங்களின் கலவையான இலங்கையின் தனித்துவமான சமையல் பாரம்பரியத்தை உயிர்ப்பிப்பதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. தொடக்க விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட உண்மையான இலங்கை உணவு வகைகளால் அழைக்கப்பட்டவர்கள் பலர் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின் மற்றொரு முக்கிய ஈர்ப்பு ‘இலங்கை கைத்தறி மற்றும் பட்டிக் சேலை விழா’ ஆகும். 2021 அக்டோபரில் கத்தாருக்கு விஜயம் செய்திருந்த பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் மற்றும் லுலு குழுமத்துடன் தூதுவர் மொஹிதீன் நடாத்திய கலந்துரையாடலின் விளைவாக இலங்கை கைத்தறி மற்றும் பட்டிக் புடவைகளை மேம்படுத்தம் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை கைத்தறி மற்றும் பட்டிக் புடவைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கைவினைப்பொருட்கள் ஆகியவை இந்த கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த முயற்சியானது உள்ளூர் கைத்தறி மற்றும் பட்டிக் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தப்படாத வெளிநாட்டு சந்தைகளை அணுகுவதை நோக்கமாகக் கொண்ட, அதே நேரத்தில் ஏற்றுமதிக் கூடையை அதிகரிக்கும். கத்தார் அரசில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டை ஊக்குவிப்பதில் ஒரு முன்னோடியாக இந்த நிகழ்வில் இலங்கை பங்கேற்பதற்கு தூதரகம் உதவியது.

Spread the love