ஒரு லட்சம் ரூபா வருமானம் பெறுவோருக்கும் இனி வரி- வர்த்தமானி வெளியிடப்பட்டது

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்து வதற்காக உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம் வரிச்சலுகை குறைக்கப்பட்டு வரி வலையின் தளம் விரிவடையும். இதனால், மொத்த மாத வருமானம் 100,000 ரூபா அல்லது அதற்கு மேல் வருமான வரி விதிக்கப்படும். 

மிக உயர்ந்த தனிநபர் வருமான வரி விகிதம் 36 வீதமாக உள்ளது. வரிச்சீர்திருத்தங்கள் மற்றும் அரச வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உறுதியளித்த தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அச்சட்டமூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறும் அனைவரும் வருமான வரியைச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த வருமானவரி அறவிடத்தகுந்த குறைந்தபட்ச வருடாந்த வருமானமான 3 மில்லியன் ரூபா இத்திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் 1.2 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே முன்னர் மாதாந்தம் குறைந்தபட்சம் 2,50,000 ரூபாவை வருமானமாகப் பெறுவோரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட வருமான வரி அறவீடு, இச்சட்ட மூலத்தினால் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவை வருமானமாகப் பெறுவோரிலிருந்து ஆரம்பமாகும். புதிய திருத்தத்தின்படி கம்பனிகள்,தனிநபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரதும் வருடாந்த வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வருமான வரி அறவிடப்படும்.

இப்புதிய திருத்தங்களின் பிரகாரம், கணிப்பீடுகளின் படி மாதாந்தம் 141,667 ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் (வருடாந்த வருமானம் 1,700,000 ரூபா) மாதாந்தம் 2,500 ரூபாவையும், மாதாந்தம் 183,333 ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் (வருடாந்த வருமானம் 2,200,000 ரூபா) மாதாந்தம் 7,500 ரூபாவையும், மாதாந்தம் 225,000 ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் (வருடாந்த வருமானம் 2,700,000 ரூபா) மாதாந்தம் 15,000 ரூபாவையும், மாதாந்தம் 266,667 ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் (வருடாந்த வருமானம் 3,700,000) மாதாந்தம் 37,500 ரூபாவையும், மாதாந்தம் 350,000 ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் (வருடாந்த வருமானம் 4,200,000 ரூபா) மாதாந்தம் 52,500 ரூபாவையும் வருமான வரியாகச் செலுத்தநேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love