ஐ. நா அமர்வுகள் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தொடரை முன்னிறுத்தி இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டினால் தயாரிக்கப்பட்ட 17 பக்க அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. ஏற்கனவே இந்த அறிக்கை இலங்கையின் வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பதிலை அரசாங்கம் நேற்று முன்தினம் சனிக்கிழமை அனுப்பியிருந்தது.


இவ்வாறானதொரு பின்னணியில் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையில் மனித உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள், இராணுவமயமாக்கல் மற்றும் காணிப் பிரச்சினை, அதிகரித்துவரும் பெரும்பான்மைத்துவம் மற்றும் நல்லிணக்கம். அமைதியைக் கட்டியெழுப்புவதில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், சிவில் சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும், தடுப்புக்காவலின் கீழ் இடம்பெறும் மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் ஏனைய முறையற்ற நடத்தைகள், பயங்கரவாதத்தடைச் சட்டப் பிரயோகம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் பொறிமுறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், முக்கிய வழக்குகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு. ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்கள் பற்றிய உயர்ஸ்தானிகரின் நிலைப்பாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

Spread the love