எல்லையில் சீனா, நேருவை சுற்றி வரும் மோடி அரசு – மன்மோகன் சிங்

பாஜக தலைமையிலான அரசுக்கு பொருளாதாரக் கொள்கைகள் புரியவில்லை, உள்நாட்டு பிரச்சினையில் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையிலும் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது என முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் முதல் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை வரை மத்திய அரசை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு சந்தித்துக்கொண்டு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதை விட முன்னாள் பிரதமர் நேரு மீது குற்றம் சுமத்துவதில் மோடி அரசு அதிக ஆர்வம் காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். 

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையின்மை, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றில் மத்திய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக கூறிய அவர், நமது எல்லையில் வந்து சீனா அமர்ந்திருக்கிறது. ஆனால் அதன் உண்மைகளை மறைப்பதில் மும்முரமாக மத்திய அரசாங்கம் உள்ளது என்றார். பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலையொட்டி அவரின் இந்த அறிக்கை வந்துள்ளது.

பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. விவசாயிகள் நடத்திய போராட்டம் பற்றியும் மத்திய அரசை நோக்கி கேள்விகளை எழுப்பிய அவர், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தாலும் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார். அரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரஸ் ஒருபோதும் நாட்டை காவு கொடுக்கவில்லை, மற்றும் உண்மையை மறைக்கும் வேலையும் செய்யவில்லை, பாஜக தலைமையிலான அரசுக்கு பொருளாதாரக் கொள்கைகளும் புரியவில்ல என்றும் அவர் கூறினார்.

Spread the love