ஊடகவியலாளர்களுக்கு நாடாளுமன்றில் கட்டுப்பாடு- எதிர்க்கட்சி சீற்றம்


ஊடகவியலாளர்கள் இருவரின் கைத்தொலைபேசிகளை பொதுனை பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பறிமுதல் செய்த சம்பவத்தை அடுத்து, ஊடகவியலாளர்களுக்கு நாடாளுமன்றில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கடும் விமர்சனத்தை முன்வைத்தார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று பொதுஜன பெரமுனவின் குழுக்கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், அதனைக் கைத்தொலைபேசியின் மூலம் காணொலிப்படுத்தினர் என்று குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இது பற்றிய விசாரணை நடத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். தமது தீர்மானத்தையும் அறிவித்தார். தீர்மானத்தின்படி, நாடாளுமன்றின் மருத்துவ மத்திய நிலையத்தில் இருந்து நுாலகம் வரையிலான பிரதேசத்தில் மாத்திரமே ஊடகவியலாளர்களால் காணொலி எடுத்தல் மற்றும் குரல் பதிவுகளை மேற்கொள்ளமுடியும். குழுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் ஊடகவியலாளர்களால் குரல் பதிவுகளைச் செய்யமுடியாது என்று சபாநாயகர் தெரிவித்தார். சபாநாயகரின் தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாக விமர்சித்தார். குழுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் இருந்து தான் உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கியுள்ளோம் என்று சுட்டிக்காட்டினார். ஊடகவியலாளர்களின் கருவிகளைப் பறிமுதல் செய்வதற்கு நாட்டின் ஜனாதிபதிக்குக் கூட அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

Spread the love