உள்நாட்டு கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு; அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் மக்கள்

இவ்வருட ஆரம்பத்திலிருந்தே கோதுமை மா விலை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. யாழ்ப்பாணத்தில் 50 கிலோகிராம் கோதுமை மா மூடை 12,500 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. 

இரண்டு உள்நாட்டு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் பேக்கரிகளுக்கு முன்னுரிமையளித்து 50 கிலோ கோதுமை மா மூடைகளை விநியோகித்து வருகின்றன. இதனிடையே, இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்பட்ட கோதுமை மா இறக்குமதி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

துருக்கி, துபாயிலிருந்து நாட்டிற்கான கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.  வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற கோதுமை மாவின் தற்போதைய மொத்த விலை கிலோ 400 ரூபாவிலிருந்து 460 ரூபாவாக சந்தையில் காணப்படுகின்றது. எனினும், உள்நாட்டு கோதுமை மா நிறுவனங்கள் விநியோகிக்கும் மாவின் மொத்த விலை 260 ரூபாவிலிருந்து 270 ரூபாவாக காணப்படுகின்றது. 

உள்நாட்டு கோதுமை மா சந்தையில் கிடைக்காத நிலையில், வௌிநாட்டு கோதுமை மாவினை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

பொருளாதார  நெருக்கடிக்கு மத்தியில், கோதுமை மாவிற்கு நிர்ணய விலை இல்லாமையினால், தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கேனும் நிர்ணய விலையை நடைமுறைப்படுத்துவதற்கு துறைசார்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்பதே அனைவரதும் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும்.

source from newsfirst
Spread the love