உடனடியாக பதவி விலகேன் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு


அரசாங்கத்தின் அமைச்சர்கள் பதவி விலகினாலும் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் வரையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாது அந்தப் பதவியில் தொடர்வதற்கான முயற்சிகளில்  ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தொடர்பான வேலைத்திட்டங்கள், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆகியன தற்போது இடம்பெற்று வருவதால் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் பிரதமர் பதவியில் தொடர எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு 9ஆம் திகதி சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட காணொலியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதில் பிரதமர், சனிக்கிழமை நடைபெற்ற கட்சித்தலைவர் கூட்டத்தில் புதிய முறைமை மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்ட போது, அதற்கான வேலைத்திட்டங்களுக்கு காலம் எடுக்கும் என்பதனால், சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்ததும் நான் அதன்போது விலகத் தயார் என்று தான் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வாரமும், அடுத்த வாரமும் சர்வதேச நாணய நிதியத்துடன் பல்வேறு வேலைகளை செய்வதற்கான வேலைத்திட்டங்களும், எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களும் இருப்பதாகவும், இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இன்னும் இது தொடர்பான நடவடிக்கைகள் தள்ளிப்போகும் என்றும் தான் வலியுறுத்தியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதில் முதலாவது வருடமே கடுமையான காலம் என்று அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி அவர் பதவியில் குறிப்பிட்ட நாட்களுக்காவது தொடரலாம் என்று அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தமக்கென உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்த ஒரே வீடு இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க அந்தக் காணொலியில் தெரிவித்துள்ளார். இதில் அதிகமாக அழிந்துபோன சொத்துக்கள் தமது நூல்களாகும் என்றும் அவர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.  போர்த்துகேயர் காலம் மற்றும் ஒல்லாந்து கால நூல்கள் உட்பட்ட 2500 நூல்கள் அதில் இருந்தன. தனது காலத்தின் பின்னர் இந்த நூல்களை நாட்டின் பல இடங்களுக்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கு தான் தீர்மானித்திருந்ததாகவும் ரணில் தெரிவித்துள்ளார். அதனைவிட, பழங்காலத்து சித்திரங்கள் பல இருந்தன. எனினும் தற்போது ஒரேயொரு சித்திரமே தம்மிடம் எஞ்சியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

Spread the love