ஈரநிலம் – உலகத்திற்கு கிடைத்த வரம்

உலகெங்கிலும் உள்ள ஈரமான புல்வெளிகள், ஆறுகள், கழிமுகங்கள், கழிமுக கடலோர குடியிருப்புப் பகுதிகள், பவளத்திட்டுக்கள், தாழ்வான நிலங்கள், குளம், குட்டைகள், ஏரிகள், மீன்குளங்கள், நீர்த் தேக்கங்கள், நெல்வயல்கள், சதுப்புநிலங்கள், சதுப்பு நிலக்காடுகள் உள்ளிட்ட அனைத்தும் ஈரநிலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக இயற்கையான சூழலில் அமைந்துள்ள, வருடம் முழுவதும் நீரினால் மூழ்கியுள்ள பிரதேசம் அல்லது காலத்துக்குக் காலம் நீரினால் மூழ்கும் பிரதேசங்கள் ‘ஈரநிலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை புவிமேற்பரப்பில் பல்வேறு பட்ட அங்கிகளுக்கு உயிர் ஆதாரமாக விளங்குவதோடு இயற்கைச் சமநிலையைப் பேணும் ஒரு களமாகவும் தொழிற்படுகின்றன. ஈரநிலங்களே உலகில் மிக உற்பத்தித்திறன் கூடிய உயிர்ச் சூழலியல் முறைமையாகக் கருதப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஆய்வுப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக ஈரநில தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் 2022ஆம் ஆண்டினுடைய உலக ஈரநில தினத்தின் சர்வதேச ஆய்வுப் பொருள் ‘மக்கள் மற்றும் இயற்கைக்கான ஈரநிலங்களின் செயற்பாடு என்பதாகும்.

ஈரநிலங்களின் முக்கியத்துவம் ஈரநிலங்களில் பலதரப்பட்ட உயிரினங்களைக் காண முடியும். பல ஈரநில உயிரினங்களுக்கு இந்தப்பிரதேசங்கள் இருப்பிடமாக இருப்பதே இதற்குக் காரணமாகும். அங்கு வசிக்கும் உயிரினங்களுக்கும் வசிக்காத உயிரினங்களுக்கும் தேவையான உணவுகள் ஈரநிலங்களில் காணப்படுகின்றன.

மண்ணில் காற்று குறைவடையும் போது அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலான விசேட ஏற்பாடுகள் இங்குள்ள தாவரங்களில் உண்டு, நன்னீரிலும், களப்பிலும் வசிக்கும் நத்தைகள், வண்ணத்துப்பூச்சிகள். இறால்கள். சிங்கி இறால்கள், மீன் இனங்கள், பட்சிகள், பாலூட்டிகள், ஈரூடக வாழிகள். ஊர்வன என்பனவும் ஈரநிலங்களுக்கு உரியனவாகும். ஈரநிலங்கள் சுற்றுலாப் பறவைகளுக்கும் தற்காலிக இருப்பிடங்களாக உள்ளன.

பொதுவாக ஈரநிலங்களின் பயன்பாட்டை பொருளாதார முக்கியத்துவம், கலாசார மற்றும் சமூகம் சார் முக்கியத்துவம் என்று இரண்டு வகையாக பிரித்து நோக்கலாம். பொருளாதார முக்கியத்துவம் என்பதனுள் மீன்பிடி, நீர் மின் உற்பத்திகள், போக்குவரத்து, கைத்தொழில் விருத்தி, விவசாயம் போன்றன உள்ளடங்குகின்றன. ஈரநிலங்களின் சமூக, கலாசார முக்கியத்ததுவம் என் னும்போது இவை மக்களிடையே அழகியற் தன்மையை ஏற்படுத்துவதோடு சுற்றுலாப் பயணம், ஆய்வு நடவடிக்கைகள், கல்வி நடவடிக்கைகள் போன்றவற்றையும் விருத்தி செய்கின்றன. இவற்றினைத் தவிர ஈரநிலங்கள் மறைமுகமான ரீதியிலும் தமது பங்களிப்பை புவிக்கு வழங்கி வருகின்றன. அந்த வகையில்,

  • உயிரின பல்வகைமையை பேணுதல்
  • நீரியல் வட்ட சமநிலையைப் பேணுதல்
  • காலநிலை மாற்றம். இயற்கைச் சமநிலை என்பவற் றைப் பேணுதல். 
  • இயற்கை இடர்களைத் தடுத்தல்.
  • கிணற்று நீர் மாசடைவைத் தடுத்தல் ஆகியவற்றைச் செய்கின்றன.


உயிர்பல்வகைமை நிறைந்த ஈரநிலங்கள்

ஈரநிலங்களில் பலதரப்பட்ட உயிரினங்களைக் காண முடியும். பல ஈரநில உயிரினங்களுக்கு இந்தப்பிரதேசங்கள் இருப்பிடமான இருப்பதே இதற்குக் காரணமாகும். அங்கு வசிக்கும் உயிரினங்களுக்கும், வசிக்காத உயிரினங்களுக்கும் தேவையான உணவுகள் ஈரநிலங்களில் காணப்படுகின்றன. மண்ணில் காற்று குறை வடையும்போது அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலான விசேட ஏற்பாடுகள் இங்குள்ள தாவரங்களில் உண்டு. நன்னீரிலும், களப்பிலும் வசிக்கும் நத்தைகள்.

வண்ணத்துப்பூச்சிகள், இறால்கள், சிங்கி இறால்கள், மீன் இனங்கள், பட்சிகள், பாலூட்டிகள், ஈரூடக வாழிகள், ஊர்வன என்பனவும் ஈரநிலங்களுக்கு உரியவையாகும். ஈரநிலங்கள் சுற்றுலாப் பறவைகளுக்கும் தற்காலிக இருப்பிடமாக உள்ளன. ஈரநிலங்கள் தமது அங்கிகளுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவ தோடு அவற்றின் செயற்பாடுகளையும் விருத்தி செய்து பேணுகின்றன. இதன் மூலம் அங்கிகளின் பல் இனத்தன்மை அதிகரிக்கப்பட்டு அங்கிகளுக்கு இடையே இயற்கைச் சமநிலை பேணப்பட்டு உயிர்பல்வகைமை பாதுகாக்கப்படுகின்றது.

இதேபோன்று நீரியல் வட்டத்திலும் பங்களிப்பு செய்கின்றன. ஆவியாக்கம், படிவு வீழ்ச்சி இவை இரண்டையும் சமநிலையில் வைத்திருக்கும் இடமாகவும் இவை விளங்குகின்றன. இதன் மூலம் நீரியல் வட்டம் சீரான சமநிலைத் தன்மையில் இயங்குவதோடு அங்கிகளுக்கு இடையே ஓர் இயற்கை சமநிலையையும் பேணுகின்றது. இதன் காரணமாக காலநிலை மாற்றங்களான அதிக வெப்பநிலை, அதிக படிவு வீழ்ச்சி, உயர்ந்த வளிமண்டல அமுக்கம், மற்றும் வெள்ளப் பெருக்கு, வறட்சி போன்ற காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை சிறந்த முறையில் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக ஈரநிலங்கள் நீரோட்டத்தை ஒழுங்குபடுத்தி வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துகின்றன. அத்துடன் கரையோர சதுப்பு நிலங்களின் ஊடாக தரைக்கீழ்நீர் ஓடுவதன் மூலம் உவர்நீர் ஊடுருவுவதை தடை செய்கின்றது. இதன் காரணமாக கிணற்று நீர் மாசடைவது தடுக்கப்படுகின்றது. மேலும் நீரைச் சேமித்து வைத்து சுத்திகரிக்கும் தனித்தன்மையான சூழலியல் சேவைகளைச் செய்தல். அலைச் செயற்பாடுகள், புயல் போன்றவற்றின் தாக்கத்தை கண்டல் தாவரங்கள் மூலம் தடுத்தல் அதாவது இவை வேர்களின் மூலம் வண்ட்லை இறுக பற்றிப் பிடிப்பதனால் அலை மற்றும் புயல் தாக்கத்தை குறைப்பதுடன் நீர் நிலைகளை அடையக்கூடிய நச்சுப் பொருள்களை தடுப்பதன் மூலம் நீர் மாசடைவதை தடுக்கின்றன. இவ்வாறான சேவைகளை மக்கள் மத்தியில் வழங்கி ஈரநிலங்கள் வெறுமையான நிலங்கள் அல்ல அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றன.

இலங்கையில் ஈரநிலங்கள்

இலங்கையில் பலதரப்பட்ட ஈரநிலங்களைக் காணமுடியும். இவற்றுள் ‘ரம்சார் ஈரநிலங்கள் (ரம்சார் என்பது ஈரானில் உள்ள நகரொன்றின் பெயர். ஈர நிலங்களை பாதுகாப்பதற்கான ஒப்பந்தம் அந்த நகரில்தான் முதன் முதல் மேற்கொள்ளப்பட்டது) என்று பெயரிடப்பட்ட ஈர நிலங்களும் உள்ளடங்குகின்றன. நமது நாட்டில் ஈர நிலங்களைப் பிரதானமாக இயற்கை ஈரநிலம், செயற்கை ஈரநிலம் என இரண்டாக வகுக்கலாம். இவ்விரண்டையும் நன்னீர் ஈரநிலம், உவர்நீர் ஈரநிலம், சவர்நீர் ஈரநிலம் என்று மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரித்தறிய முடியும் 2013ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையில் இலங் கையில் ஆறு ஈரநிலங்கள் ரம்சார் ஈரநிலங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன:

  • பூந்தல தேசியவனம்
  • ஆனவிழுந்தாவ வாவிகள் தொகுதி (சரணாலயம்
  • மாதுகங்கை
  • குமண குடும்பிகல சரணாலயம்
  • வங்காலை சரணாலயம்
  • வில்பத்து சரணாலயம் என்பனவாகும்.

ரம்சார் ஈரநிலமாக பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது தேசியவனமாக பூந்தல தேசிய வனவியில் பூங்கா கருதப்படுகின்றது. பதினேழு தீவுகளைக் கொண்ட கண்டல் தாவரங்களால் சூழப்பட்ட மாதுகங்கை ஈரநிலமானது 2003ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி சர்வதேச ரம்சார் ஈரநிலப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ரம்சார் ஈரநிலமாக ஆனவிழுந்தாவ ஈரநிலம் பிரகடனப்படுத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டு ஒக்ரோபர் 29ஆம் திகதி குமண குடும்பிகல சரணாலயம் ரம்சார் ஈரநிலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. முட்புதர்கள் கொண்ட அடர்ந்த காடுகள். கடற் புல்வெளிகள், களப்புகள், கண்டல்காடுகள், உவர்நீர் சதுப்பு நிலங்கள், ஆழமற்ற கடல்பகுதி, மணல் குன்றுகள் ஆகிய சூழல் தொகுதிகளைக் கொண்ட வங்காலை சாரணாலயம் (மன்னார்) 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ரம்சார் ஈரநிலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1938ஆம் ஆண்டில் வில்பத்து மிகவும் பெரிய சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டாலும் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதியே சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ரம்சார் ஈரநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இது 131, 693 ஹெக்ரேயர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது.

ஈரநிலங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

உலக மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்து வரும் ஈரநிலங்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக உலகில் அதிகரித்துவரும் சனத்தொகை காரணமாக ஈர நிலங்கள் சம அளவிலும், பரம்பலிலும் பல்வேறு மாற்றங்களையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றன. இதன்காரணமாக ஈரநிலங்கள் தற்போது அழிவடைந்து கொண்டும். மாசடைதலுக்கு உட்பட்டும் வருகின்றன. மிதமிஞ்சிய நீர்ப்பாவனை, நீரின் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பாக உவர்த்தன்மை அதிகரிப்பு. அளவுக்கு அதிகமான மீன்பிடி பொருத்தமற்ற மீன்படி முறைகள், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிலம் நிரப்பப்படுத்தல். முருகைக் கற்பாறை அகழ்தல், சிப்பி அகழ்தல், மண் அகழ்தல், விவசாயத்துக்கு மிதமிஞ்சி உரமிடல், நகரசபைக்கழிவுகள், கைத்தொழிற்சாலைக் கழிவுகள். திட்டமிடப்படாத நிலப்பயன்பாடுகள் போன்ற செயற்பாடுகளால் ஈரநிலங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன.


ஈரநிலங்களை பாதுகாப்போம்

இயற்கையின் சமநிலையைப் பாதுகாப்பதற்கு ஈரநிலங்களைப் பாதுகாப்பது அவசியமாகும். ஈரநிலங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவதன் ஊடாக அவற்றைப் பாதுகாக்கமுடியும். இரசாயனப் பசளைகளைக் குறைவாகப் பயன்படுத்துதல், திட்டமிட்ட வகையில் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளல். நீர்மூலங்களில் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்த்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளினூடாக ஈரநிலங்களைப் பாதுகாக்க முடியும். அத்துடன் ஈரநிலங்களின் முக்கியத்துவம் பற்றி மக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துதல், முருகைக்கல் அகழ்தல் மற்றும் கண்டல் தாவர அழிப்பு போன்றவற்றை தடைசெய்தல், பாடசாலை மட்டத்திலும் பல்கலைக்கழக மட்டத்திலும் ஈரநிலங்கள் தொடர்பான கருத்தரங்குகள், விவாதங்களை நடத்துதல், ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கென அரசாங்கம் மானிய உதவிகளை வழங்குதல், கரையோர மணல் அகழ்வு நடவடிக்கைகளை தடை செய்தல் போன்ற பல்வேறுபட்ட நடவடிக்கைகளினாலும் ஈரநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.

Spread the love