இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா புதிய வியூகம் ?

தற்போது இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில், கொழும்பிற்கும் புது டெல்லிக்கும் இடையிலான இராஜதந்திர வட்டாரங்கள் பரபரப்பாக காணப்படுவதாகவும், இந்தப் புதிய சூழலில் இந்தியாவை எதிர்கொண்டு இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா புதிய கொள்கையை கடைப்பிடிக்கலாம் என்று கொள்கை ஆய்வு மையம் ( Policy Research Group POREG) கூறியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே புதுடில்லிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிம்ஸ்டெக் (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation – பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி) உச்சி மாநாட்டிற்காக இலங்கைக்கு வருவார் என்று நம்பப்படுகிறது.

மார்ச் 30, 2022 அன்று நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை, இந்தியா விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், எதிர்வரும் மார்ச் 18-20 வரையான நாட்களில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சமீபத்தில் புதுதில்லியில் வைத்து அறிவித்தார்.

அமைச்சர் பசில் ராஜபக்ச தனது அடுத்த இந்திய பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக நம்பகமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனத்தெரிவித்துள்ள மேற்படி ஆய்வு மைய சிந்தனையாளர் குழு , இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ் அவர்களின் புதுடில்லி பயணத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

நாட்டின் தற்போதைய நலிந்த பொருளாதாரச் சூழலில், வெளிநாடுகளில் இருந்து வரும் கடன்கள் மற்றும் கடன் வசதிகள் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இருந்து தப்பிக்க உதவாது என்று இலங்கையின் பொருளாதார வல்லுநர்கள் வாதிட்ட போதிலும், குறுகிய காலத்திற்கான நிதியைப் பெறுவதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதே சிறந்தது என்று இலங்கை அரசாங்கம் நம்புகிறது. அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் “ஒத்துழைப்பிற்கான நான்கு தூண்கள் (கூட்டுமுயற்சி Teaming, பொறுப்புக்கூறலுக்கான அதிகாரம் Accountable Empowerment, மூலோபாயத் தலைமைதத்துவம் Strategic Leadership, மக்களாட்சி Democracy) தொடர்பாக ஆராயப்பட்டதாக கொள்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிந்தனையாளர் குழாமின் கூற்றுப்படி, கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலான இலங்கையின் வாலாற்றில் அது எதிர்கொண்ட மிக மோசமான மோசமான நிதி நெருக்கடியால் இந்த ஒத்துழைப்பிற்கான நான்கு தூண்கள் எனப்படும் மூலோபாயம் ஆராயப்பட்டதாக தெரிகிறது.

ஒத்துழைப்பிற்கான முதலாவது தூணாக அவசரகால உணவு மற்றும் மருதத்துவ உதவி இடம்பெறுகிறது. இதற்கான அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்வ சதியை இலங்கை நிதியமைச்சருடனான அண்மைய மெய்நிகர் சந்திப்பிற்குப் பின்னர் அறிவித்ததுடன், 1 மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி தொடர்பாக தற்போது ஆராயப்படுகிறது என்றும் அவர் கூறினார். 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதி உட்பட்ட பிற ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கான மற்றொரு சுற்று பேச்சுவார்த்தையில் நிதி அமைச்சர் ராஜபக்ச கலந்து கொள்வார்.

ஒத்துழைப்பிற்கான இரண்டாவது தூணாக, இந்திய நிறுவனங்களிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு 500 மில்லியன் டொலரைக் கடனாக வழங்கும் திட்டம் இடம்பெறுகின்றது.

இதன் மூன்றாவது நிகழ்வாக, திருகோணமலை எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சேமிப்பில் இரு நாடுகளும் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது என்று கொள்கை ஆய்வு மையம் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு இந்தியாவின் உதவி இரண்டு நிலைகளில் வந்தது முதலாவது ஆசிய கிளியரிங் யூனியனுக்கு (Asian Clearing Union) உடனடியாக செலுத்தப்படவேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள், இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது, இரண்டாவது 400 மில்லியன் டாலர் நாணயப் பரிமாற்றம் ஆகும்.

மேலும், இறுதித் தூணாக இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கான முதலீடு.

தற்போதைய புதிய சூழலில், இந்தியாவை தோற்கடித்து, இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா இப்போது புதிய வியூகத்தை வகுக்கலாம். கடன்கள் மற்றும் கடன் வசதிகள் நாட்டிற்கு பயனளிக்காது என்கின்றபோதிலும், இந்த விளையாட்டை இலங்கை தடையின்றி தொடரும் என்று கொள்கை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

தனது தோல்வியடைந்த, கரிம வேளாண்மை கொள்கை, ஏற்றுமதி/இறக்குமதிக்கு கட்டுப்பாடு போன்றவற்றிலிருந்து பெற்றுக்கொண்ட படிப்பினைகளின் ஊடாக, கடன்களின் அடிப்படையில் அமையாத நிலையான வளர்ச்சி தொடர்பான தனது புதிய மூலோபாய கொள்கையை, இலங்கை வகுக்க வேண்டும் என கொள்கை ஆய்வு மையம் கருதுகிறது.

Spread the love