இலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் -ஷெஹான் சேமசிங்க

இலங்கை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், நாட்டில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடைவதற்கு அரசாங்கம் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், எனவே முதலீட்டாளர்கள் இலங்கை சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் சென்னையில் நடைபெற்ற “இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா” மன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்துவதன் மூலம் இலங்கை பங்குச் சந்தையில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டை ஊக்குவிப்பதற்காக பங்குதாரர்களுடன் இணைந்து கொழும்பு பங்குச் சந்தை (CSE) இந்த மன்றம் ஏற்பாடு செய்தது.

பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பு பலவீனங்களை நிவர்த்தி செய்யும் வகையில் ஆழமான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு இலங்கை பலப்படுத்தப்படும். பொருளாதார ஸ்திரமின்மைக்கான முக்கிய காரணங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு தேவையான சீர்திருத்தங்கள் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஊழல் தடுப்புச் சட்டம், பாராளுமன்ற பட்ஜெட் அலுவலகம், புதிய மத்திய வங்கிச் சட்டம் போன்ற புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி, நிதி நிர்வாகத்தில் தேவையான சுதந்திரம், வெளிப்படைத் தன்மை மற்றும் நல்லாட்சி ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Spread the love