இரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் உயிரிழப்பு, 12 பேர் காயம்

இரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இரம்புக்கனை நகரில் ரயில் மார்க்கத்தை மறித்து நேற்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு நேற்று மாலை பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இதன்போது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

முன்னதாக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்த போதும், மக்கள் எரிபொருள் பௌசருக்கு தீ வைத்து, முச்சக்கரவண்டியை சேதப்படுத்தியதால் பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டகாரர்களால் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

துப்பாக்கி பிரயோகத்தின் போது சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பொதுமக்களும் பொலிஸ் அதிகாரிகள் சிலரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரம்புக்கனை நகருக்குள் செல்வதற்கான அனைத்து வீதிகளையும் மறித்து இன்று காலை முதல் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இரம்புக்கனை – மாவனெல்ல வீதி, ரம்புக்கனை – கேகாலை வீதி, இரம்புக்கனை – குருநாகல் வீதி என அனைத்து பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதேவேளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை பாலத்திற்கு அருகில் வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீர்கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் தோப்பு பாலம் அருகில் வீதியை மறித்து மக்கள் இன்று மாலை 3 மணியிலிருந்து மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் . பதுளை – எட்டம்பிட்டிய நகரிலும், பதுளை – நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மஸ்கெலியா நகரிலிருந்து வௌி இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் சாரதிகளும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நோட்டன், கினிகத்தேன, ஹட்டன், சாமிமலை, நல்லதண்ணி ஆகிய பகுதிகளுக்கு மஸ்கெலியா நகரிலிருந்து பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். இதனிடையே மாத்தளை நகரிலும் தனியார் பஸ் ஊழியர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இயங்கும் அனைத்து தூர இடங்களுக்கான பஸ்களும் இன்று சேவையிலிருந்து விலகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். A9 வீதியில் கட்டுகஸ்தோட்டை பகுதியை மறித்து தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஹட்டன் நகரிலும் இன்று எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியையும் மக்கள் மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியூடான வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, அநுராதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டி – மஹியங்களை பிரதான வீதி தெல்தெனிய நகரில் மறிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அதிகளவிலான மக்கள் கூடி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்டம் அருகே பஸ்கள் நிறுத்தப்பட்டு வீதி மறிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நகரிலும் வீதி மறிக்கப்பட்டு மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளமையால், மக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர், கொழும்பு – பதுளை பிரதான வீதி – ஹப்புத்தளை நகரில் மறிக்கப்பட்டு இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பண்டாரவளை நகரிலும் பஸ் சாரதிகள் இன்று முற்பகல் முதல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Spread the love