இயற்கை எண்ணெய்களை மாத்திரம் பயன்படுத்துமாறு தெங்கு ஆராய்ச்சி நிலையம் அறிவித்தல்

வெண்ணிற ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிலையம் பரிந்துரைத்துள்ள இயற்கை எண்ணெய்களை மாத்திரம் பயன்படுத்துமாறு தெங்கு ஆராய்ச்சி  நிலையம் தென்னஞ்செய்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 

செயற்கை எண்ணெய்களை பயன்படுத்துவதனூடாக சூழலுக்கு ஏற்படும் சேதத்தை ஈடு செய்ய முடியாது என இலங்கை தெங்கு ஆராய்ச்சி  நிலையத்தின் தலைவர் மல்ராஜ் பீரிஸ் தெரிவித்தார். தேங்காய், இலங்கையர்களின் உணவில் முக்கிய இடம்பிடிக்கின்றது.

இலங்கையின் தெங்குச்செய்கையில் சுமார் ஒரு வருட காலமாக பரவி வரும் வெண்ணிற ஈயின் தாக்கம் காரணமாக தெங்கு உற்பத்தி ஓரளவு குறைந்துள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தெங்கு ஆராய்ச்சி நிலையத்தின் தரவுகளுக்கு அமைய, வெண்ணிற ஈயின் தாக்கம் காரணமாக களுத்துறை, கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் தெங்கு செய்கைக்கு  பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

இதனைத் தவிர திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி, புத்தளம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இந்த நோயின் தாக்கம் பதிவாகியுள்ளது.

வரக்காபொல, தோலங்கமுவ, ரம்புக்கன உள்ளிட்ட கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்த வெந்நிற ஈயின் நோய்த்தாக்கம் பரவியுள்ளதாக பதிவாகியுள்ளது. 

சுமார் 2 முதல் 3 மில்லி மீட்டர் அளவு கொண்ட இந்த சிறிய வெந்நிற ஈ இலங்கையில் 80 வீதமான தென்னந்தோப்புகளை சேதப்படுத்தியுள்ளதாக தெங்கு செய்கை  சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தென்னை ஓலையின் அடிப்பகுதியில் வாழும் இந்த வெந்நிற ஈ, தென்னை மரத்தை சேதப்படுத்துவதால், தென்னை மரம் படிப்படியாக மஞ்சள் நிறமாக மாறி மரத்தின் வளர்ச்சி குன்றும் நிலை ஏற்படுகின்றது. 

வெந்நிற ஈயைக் கட்டுப்படுத்த வெந்நிற ஈயை வேட்டையாடும் உயிரினமொன்றை அடையாளம் கண்டுள்ளதாக  தெங்கு ஆராய்ச்சி  நிலையம் தெரிவித்துள்ளது. 

சில தெங்கு செய்கையாளர்கள், வெந்நிற ஈயினால் ஏற்படுத்தப்பட்ட சேதத்தை கட்டுப்படுத்த செயற்கை எண்ணெய் பயன்படுத்துவதாக தெங்கு ஆராய்ச்சி  நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. 
 

Spread the love