இந்தி திரையுலகை ஆக்கிரமிக்கும் தென்னிந்திய திரைப்படங்கள் ஒரு பார்வை!

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்கள் இந்தி திரையுலகை பலவகைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. முதலாவதாக ரீமேக்குகள். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெற்றி பெறும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன.

இந்தி திரையுலகு புஷ்பா படத்தின் வெற்றியால் அரண்டு போயிருக்கிறது. புஷ்பா இந்திப் பதிப்பு மட்டும் சுமார் 90 கோடிகளை வசூலித்துள்ளது. இது வரிகள் போக நெட் கலெக்ஷன்.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்கள் இந்தி திரையுலகை பலவகைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. முதலாவதாக ரீமேக்குகள். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெற்றி பெறும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன.

அமீர் கானுக்கும், இந்தி திரையுலகுக்கும் முதல் 100 கோடி படமாக அமைந்த கஜினி, தமிழ் கஜினி படத்தின் இந்தி ரீமேக். அக்ஷய் குமாரின் முதல் 100 கோடி படமான ரவுடி ரத்தோர் தெலுங்கு விக்ரமார்க்குடு படத்தின் ரீமேக். அஜய் தேவ்கானுக்கு அதிரடி ஹிட் படமாக அமைந்த சிங்கம், தமிழ் சிங்கம் படத்தின் ரீமேக்.

சல்மான் கானின் வெற்றிப் படமான வான்டட், கிக் இரண்டும் தெலுங்குப் படங்களான போக்கிரி மற்றும் கிக் படங்களின் ரீமேக். பாடிகாட் படம் மலையாள பாடிகாட் படத்தின் ரீமேக். அவரது தேரே நாம் தமிழ் சேது படத்தின் தழுவல்.

ரோஹித் ஷெட்டியின் சிம்பா தெலுங்கு டெம்பரின் ரீமேக். அஜய் தேவ்கானின் த்ரிஷ்யம் மலையாள த்ரிஷ்யத்தின் ரீமேக். தமிழில் வெளியான மாநகரம், விக்ரம் வேதா, கைதி உள்பட பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன. தெலுங்கின் ஆல வைகுந்தபுரமுலு உள்பட பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன.

மலையாளத்தில் பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் வெற்றி பெற்ற டிரைவிங் லைசென்ஸ் திரைப்படத்தை இந்தியில் அக்ஷய், எம்ரான் ஹஸ்மி நடிப்பில் செல்ஃபி என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களின் ரீமேக்குகள்தான் இந்தி திரையுலகின் பெருமளவு வர்த்தகத்தை தீர்மானிக்கின்றன.

இரண்டாவதுவகை டப்பிங். பாகுபலி இரண்டாம் பாகத்தின் இந்தி டப்பிங் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. இன்றுவரை நேரடி இந்தி சினிமாகூட இந்த வசூலை பெறவில்லை. ஷங்கரின் 2.0 திரைப்படம் சுமார் 189 கோடிகளை வசூலித்தது. பிரபாஸின் சாஹோ இந்தி டப்பிங் சுமார் 140 கோடிகள் வசூலித்தது. இப்போது புஷ்பா 90 கோடிகளை வசூலித்துள்ளது. புஷ்பா வெற்றி காரணமாக அல்லு அர்ஜுனின் ஆல வைகுந்தபுரமுலு படத்தையும் இந்தியில் டப் செய்து ஜனவரி 26 திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். இத்தனைக்கும் இப்படம் இந்தியில் ரீமேக்கும் செய்யப்படுகிறது.

இந்தப் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து புஷ்பா இயக்குனர் சுகுமாரின் முந்தையப் படமான ரங்கஸ்தலத்தை இந்தியில் டப் செய்து வெளியிட உள்ளனர். இதில் சமந்தா, ராம் சரண் நடித்திருந்தனர். அஜித்தின் வலிமை, கமலின் விக்ரம், விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட தமிழின் முக்கியமான படங்கள் இந்தியிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளன. இதுவரை இந்திப் பதிப்பிற்கு அதிக விளம்பரம் செய்யாத தயாரிப்பாளர்கள் இப்போது விளம்பரம் செய்யவும் தயாராக உள்ளனர்.

ஓடிடி காரணமாக தென்னிந்திய மொழி சினிமாக்களை சப் டைட்டிலுடன் வடஇந்தியாவில் உள்ள இந்தி பேசுகிறவர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இங்கு கதைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், கன்டென்டில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முயற்சிகள் அவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை தென்னிந்திய சினிமா அறுவடை செய்யப் பார்க்கிறது. இது தென்னிந்திய சினிமா வர்த்தகத்துக்கு பூஸ்ட் தரும் முயற்சி. கதையிலும் உருவாக்கத்திலும் தொடர்ந்து  கவனம் செலுத்தினால் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் ஒருநாள் இந்தி சினிமாவுக்கு மேல் தங்களின் கொடியை பறக்கவிடலாம்.

Spread the love