அழகி பட்டத்தை வென்ற திருநங்கை

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அழகி பட்டம் வென்றுள்ளார். திருநங்கைகளுக்கான மிகவும் பிரசித்தி பெற்ற மிஸ் இண்டர்நேஷனல் குயின்’ என்ற அழகிப்போட்டி, கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா நகரில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஃபுஷியா அன்னே ரவேனா (Fuschia Anne Ravena) என்பவர், மிஸ் இண்டர்நேஷனல் குயின் பட்டத்தை வென்றார். போட்டியின் போது, மிஸ் இன்டர்நேஷனல் குயின் பட்டத்தை அவர் பெற்றால் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு எவ்வாறு கற்பிப்பார் என்று ஃபுஷியாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “மக்கள் மத்தியில் அன்பு, அமைதி மற்றும் ஒற்றுமையைப் பரப்புவதற்காக செயல்படுவேன். அதன்மூலம் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை பரப்புவேன். நாம் அனைவரும் ஒரே வானத்தின் கீழ் வாழ்கிறோம், ஒரே காற்றை சுவாசிக்கிறோம். பல வேறுபாடுகளுக்கு மத்தியில் வாழும் போதிலும், நம் அனைவருக்கும் கிடைக்கும் காதல் என்பது உலகளாவியளவில் ஒரே விஷயமாக இருக்கிறது” என்றார்.

Spread the love