அர்ஜுனவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்

விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் நிறுவனம்) கோரிக்கை கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினதும் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களினதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அர்ஜுன ரணதுங்க வெளியிட்ட கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு வழங்குமாறு கோரியே அர்ஜுன ரணதுங்கவுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க அண்மையில் ஊடக நேர்காணலின் போது (தெரன பிக் ஃபோக்கஸ்) வெளியிட்ட பொய்யான, இழிவான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட கருத்து தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு நேற்று திங்கட்கிழமை அவசரமாகக் கூடி ஆராய்ந்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழுவுக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பேசி, அதன் நன்மதிப்பு மற்றும் நற்பெயரைக் கெடுத்து, வேண்டுமென்றே இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவுக்கு எதிராக பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பகிரங்க கருத்துக்களை வெளியிட்டதால் அவருக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய, பொய்யான மற்றும் இழிவான கருத்துக்களின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு ஏற்படுத்திய நற்பெயர் இழப்புகளுக்கு 2 பில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு கோரி, அர்ஜுன ரணதுங்கவுக்கு நிறைவேற்றுக் குழுவினர் கோரிக்கை கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love