அமைச்சர் அலி சப்ரி தலைமையில் ஜெனிவா புறப்பட்ட இலங்கைக் குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு நேற்று ஜெனிவா பயணமாகவிருந்தது. இதன்படி, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும்  அதிகாரிகள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட், எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அமர்வில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கை குறித்து முக்கிய விடயங்கள் இடம்பெறவுள்ளன. இந்த அறிக்கையின் தகவல் வடிவத்தினை கடந்த 26ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கொழும்பிற்கு அனுப்பிவைத்த அதேவேளை அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைப்பதற்கு இலங்கைக்கு நேற்று ஐந்தாம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனை உறுதி செய்துள்ள வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் அரசாங்கம் பதிலை அனுப்பிவைக்கும் எனவும் தெரிவித்திருந்தன. அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாததை சுட்டிக்காட்டும் கடுமையான அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரம் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாக 12 ஆம் திகதி உரை யாற்றவுள்ளார்.

Spread the love