அமெரிக்க நிறுவனத்துடனான யுகதனவி  விவகாரத்தில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane)  யுகதனவி  விவகாரத்தில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை எனவும் எதிர்தரப்பினர் குறிப்பிடுவதை போன்று கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்யவோ, இரத்து செய்யவோ முடியாது என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

அமெரிக்க நிறுவனத்துடனான யுகதனவி ஒப்பந்தத்தில் நாட்டுக்கு எதிரான விடயங்கள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை. யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் முறையற்ற வகையில் கைச்சாத்திடப்படவில்லை. ஒப்பந்தம் தொடர்பிலான உள்ளடங்கங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திற்கு 99 வருட கால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்யவும், இரத்து செய்யவும் முடியாது. சர்வதேச ஒப்பந்த சட்டங்களுக்கு அமையவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறுகிய அரசியல் நோக்கத்தை கருத்திற் கொண்டு அனைத்து அபிவிருத்தி திட்டங்களிலும் குறை கண்டால் நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது எனமேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love