அனுர மீது முட்டை தாக்குதல் – அமைச்சர் தொடர்பை மறுத்தார்

நேற்று கம்பகாவில் வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸ்ஸநாயக்க மீது ஒரு குழுவினர் முட்டை தாக்குதல் நடாத்தியிருந்தனர். கம்பகாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற கட்சி நிகழ்வுக்காக அவர் வருகை தந்த வேளையில், மண்டப வாயிலில் வைத்து அவரை குறிவைத்து அவரது வாகனம் மீது முட்டை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்திய குழுவினரின் இருவரை கட்சி அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் மடக்கி பிடித்துள்ளனர். அதன்போது 16 பேரடங்கிய குழு குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்த சாக்குதல் சம்பவத்துடன் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தனக்கும் இந்த முட்டை தாக்குதல் சம்பவத்துக்கும் எந்த தொடர்புமில்லையென அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

“கமபகாவில் மட்டுமல்ல எங்கும், எவரும் கூட்டங்களை நடத்தலாம்.அதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு” என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பகா மாவட்ட தலைவரும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு,பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

Spread the love