அதானி குழுமத்திற்கு வழங்கிய வடக்கில் உத்தேச காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களுக்கு எதிர்ப்பு

கிளிநொச்சி – பூநகரியிலும் மன்னாரிலும் உத்தேச காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியாவின் அதானி குழுமத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபை நேற்றுமுன்தினம் (22) அனுமதி வழங்கியது

இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதியுடன் கூடிய கடிதத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று அதானி நிறுவன பிரதிநிதிகளிடம் கையளித்தார்.

இதன் மூலம் நேரடி முதலீடாக 442 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாகவும் குறித்த காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் ஊடாக 350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர்  திலும் அமுனுகம  கூறினார்.

இதேவேளை,  கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  இந்த காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் தொடர்பாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதன்போது, காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கிளிநொச்சி பிர​ஜைகள் குழுவின் செயலாளர் S.ஜீவநாயகம் வலியுறுத்தினார். 

இதேவேளை, இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவது தொடர்பிலான யோசனை மற்றும் உத்தேச காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசம் இன்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.

இதன்போது, காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.  அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் ஓரிரு தினங்களில் உரிய பதிலை தராதவிடத்து, பாரிய எதிர்ப்பை வௌிப்படுத்தவுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மொஹமட் ஆலம் தெரிவித்தார். 

Adani Enterprises நிறுவனம் 10% சரிவை எதிர்நோக்கியுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.  Adani Total Gas, Adani Transmission & Adani Green Energy ஆகியனவற்றின் பங்குகள் என்றுமில்லாதவாறு  இன்றைய  தினம்  சரிவடைந்துள்ளதாக Business Today ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. 

Hindenburg அறிக்கையைத் தொடர்ந்து நேற்றைய தினத்தில் 43.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சரிவை  சந்தித்துள்ள அதானி, உலக  பணக்காரர்கள் வரிசையில் 25 ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார்.   அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த Hindenburg ஆய்வு நிறுவனம் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

SOURCE FROM NEWSFIRST
Spread the love