அடுத்த பட்ஜெட்டில் 90% வரியின் மூலம் அரசுக்கு வருவாய்

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானத்தில் 65 வீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், அதில் 90 வீதத்தை வரி வருவாயாகப் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சியம்பலாபிட்டிய மேலும் தெரிவிக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் நாட்டின் வருமானத்தை 8.5 தொடக்கம் 13 வீதமாக அதிகரிப்பதே இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும், அதற்காக கடந்த காலத்தை விட 875 முதல் 900 பில்லியன் ரூபாவாக அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இலங்கையின் மிகவும் சவாலான வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் நாட்டின் பொருளாதார இறையாண்மையை பாதுகாத்து மக்களை வாழவைக்கும் சவாலை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எதிர்கொள்ளவுள்ளது. நாட்டின் வரி வருவாயை அதிகரிப்பதற்கான முதலாவது வரைவுக்கு எதிராக எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இக்கட்டான நேரத்தில் எதிர்க்கட்சிகள் வழமையாக செயற்படுவது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவு 7885 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022 ஆம் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட 6100 பில்லியன் ரூபாவிலிருந்து 1785 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும். அல்லது 29.27 அதிகரிப்பாகும். சுகாதாரத்திற்காக 432 பில்லியன் ரூபா, கல்விக்காக 504 பில்லியன் ரூபா, பாதுகாப்புக்காக 367 பில்லியன் ரூபா, சமூகப் பாதுகாப்பிற்கு 572 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Spread the love